மகனை பிரிந்துவாழ்ந்த ஏக்கத்தில், பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சூளைமேடுபகுதியில் வசித்தவர் சுதா மல்லிகா. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
சுதாமல்லிகாவின் கணவர் சதீஷ்குமாரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். எம்.பி.பி.எஸ். படிக்கும் போது இவர்களுக்குள் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன் திருமணத்தில் முடிந்தது.
மருத்துவ தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன் மனைவி இருவரும் அன்றாட பணிக்கு வந்து விடுவதால் குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாமல் வேதனையில் திணறினர்.
ஈரோட்டில் இருக்கும் சுதா மல்லிகாவின் பெற்றோர் குழந்தையை தாங்கள் பார்த்துக் கொள்வதாக முன்வந்ததால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டனர்.
குழந்தை தன்னுடைய தாயாரிடம் இருந்தாலும் சுதாமல்லிகாவின் மனம் சென்னையில் நிம்மதியாக இல்லை. தினமும் தாயாருக்குப் போன் செய்து குழந்தையின் குரலை போனில் கேட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கமான நேரத்தில் தாயாருக்கு சுதாமல்லிகா போன் செய்யவில்லை. சுதாமல்லிகாவின் போன் வராததோடு அவரது எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவரது தாயார் சுதாமல்லிகாவின் கணவர் சதீஷ்குமார் போனில் தொடர்பு கொண்டார். இதனால் பதறிய சதீஷ்குமார் வீட்டில் சுதாமல்லிகாவை தேடியுள்ளார்.
அப்போது தனியறையில் சுடிதாரின் துப்பட்டாவில் சுதாமல்லிகா தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை சதீஷ்குமார் காண நேர்ந்தது.
தற்கொலைக்கான காரணமாக ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதியுள்ளார். அதில், 'தாய்ப்பாசத்தில் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் மகனே', என்று தொடங்கி மகனின் பிரிவால் படும் துயரத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார்.
சுதாமல்லிகாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுதாமல்லிகாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அவர் பணியாற்றிய அதே ஸ்டான்லி மருத்துவமனைக்கு பொலிசாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.