நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
கடைசி நாளான இன்று ரசிகர்களுடன் பேசுகையில், நான் எது பேசினாலும் சர்ச்சை ஆகிறது, பேசாவிட்டாலும் விவாதம் ஆகிறது.
ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூகவலைத்தளங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படும் போது வேதனை அளிக்கிறது.
ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுகிறது, எனக்கு பெயர், புகழை கொடுத்தது தமிழனாக்கியது ரசிகர்கள் தான்.
நான் பச்சை தமிழன், நீங்கள் எங்கு தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர, வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல மாட்டேன்.
என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கக்கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வரக்கூடாதா? வேறு திறமையானவர்கள் இல்லையா? இருக்கிறார்கள்.
ஸ்டாலின் எனது நண்பர், திறமையானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்.
தொல்.திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக போராடியவர், சீமான் நல்ல போராளி.
தமிழகத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது, சிஸ்டம் நன்றாக இல்லை, அதனை சரிசெய்ய மக்கள் சிந்தனையில் தான் மாற்றம் வரவேண்டும்.
தொடர்ந்து பேசினால் சர்ச்சையாகிறது என்பதால் தான் பேசுவதை தவிர்க்கிறேன், எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது.
உங்களுக்கும் குடும்பம், பொறுப்புகள் உள்ளது, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம், அதுவரையிலும் பொறுமையாக இருங்கள் என பேசியுள்ளார்.