பிரித்தானிய இளவரசரான ஹரி தனது தோழியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்வதில் எவ்வித தடையும் இல்லை என இங்கிலாந்து தேவாலயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய இளவரசரான ஹரி(32) அமெரிக்காவில் பிறந்த Meghan Markle(35) என்ற மொடலை கடந்த 10 மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இருவரின் திருமணத்தில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, இளவரசர் ஹரியின் தோழி அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட இயக்குனரான Trevor Engelson என்பவரை 2011-ம் ஆண்டு திருமணம் செய்து 2013-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றவர் ஆவர்.
விவாகரத்து பெற்ற பெண்ணை அரசுக் குடும்பத்தை சேர்ந்த இளவரசர் திருமணம் செய்யலாமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பிரித்தானிய நாட்டு சட்டப்படி, இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) சட்டவிதிகளின்படி திருமணம் செய்தால் மட்டுமே அது சட்டப்பூர்வ திருமணமாக அங்கீகரிக்கப்படும்.
இந்நிலையில், இங்கிலாந்து தேவாலயம் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்து தேவாலயத்தில் சில சட்ட திருத்தங்கள் கொண்டு வந்ததால் அதன் அடிப்படையில் விவாகரத்து பெற்ற தோழியை இளவரசர் ஹரி திருமணம் செய்வதில் எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கிலாந்து தேவாலயம் அனுமதி அளித்தாலும் கூட தனது பாட்டியும் பிரித்தானிய மகாராணியுமான இரண்டாம் எலிசபெத் இத்திருமணத்திற்கு அனுமதி அளித்தால் மட்டுமே இருவரும் ஒன்று சேர முடியும் என்ற தகவலும் தற்போது பரவி வருகிறது.