ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்தை அவரது நினைவிடமாக மாற்ற வேண்டும் என கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம், க்ரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் இன்று தொடங்கியது.
இந்த கையெழுத்து இயக்கத்தை, பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். இதில் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளிலும் தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.