காஞ்சனா சீரியஸ் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து வெளிவந்துள்ள படம் தான் மொட்ட சிவா கெட்ட சிவா. லாரன்ஸ் என்றாலே கமர்ஷியல் மசாலா தான், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் அறுசுவை விருந்தாக இருக்கும், அப்படி ஒரு நிறைவான விருந்தை தந்ததா? இந்த மொட்ட சிவா கெட்ட சிவா, பார்ப்போம்.
கதைக்களம்
சென்னை சிட்டி மட்டுமின்றி தமிழகத்தையே தன் கண்ட்ரோலில் வைத்துள்ளார் ஜிகே என்பவர். அவன் அட்டூழியத்தை அடக்கிய தீருவேன் என சத்யராஜ் கங்கனம் கட்டி வருகின்றார்.
ஆனால், ஜிகேவின் அரசியல் வளர்ச்சி சத்யராஜிற்கு பெரும் சவாலாக இருக்க, வம்பாக சென்னைக்கு போஸ்டிங் வாங்கி வருகிறார் லாரன்ஸ்.
லாரன்ஸ் ஆரம்பத்தில் ஜிகே வுக்கு ஆதரவாகவும், சத்யராஜிற்கு எதிராகவும் செயல்படுகின்றார், அப்படி ஒரு கட்டத்தில் ஜிகேவின் தம்பி வம்சி ஒரு பெண்ணை கற்பழிக்க, அதிலிருந்தும் லாரன்ஸ் காப்பாற்றுகிறார்.
சத்யராஜ் அந்த பெண்ணை பற்றியும், போலிஸ் வேலையை பற்றியும் லாரன்ஸிற்கு அரை மணி நேரம் கிளாஸ் எடுக்க, அதன் பிறகு ஹீரோ சும்மா இருப்பாரா? ஜிகேவின் சாம்ராஜியத்தை எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
லாரன்ஸ் டைட்டில் கார்டிலேயே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என தனக்கு தானே போட்டு ஷாக் கொடுக்கின்றார், ஒரு பாடலில் எம்.ஜி.ஆர்க்கு சமர்ப்பிக்கிறார், என்ன திட்டத்தில் இருக்கின்றார் என்றே தெரியவில்லையே..!. ஆரம்பத்தில் நெகட்டிவ் ஷேட், பிறகு சத்யராஜிற்கும், தனக்குமான உறவு, அது எப்படி பிரிந்தது, அதற்கு சத்யராஜ் கொடுக்கும் விளக்கத்தினால் நல்லவனாக மனம் மாறுவது எல்லாம் 80களிலேயே பல படத்தில் பார்த்தவை தான்.
ஆனால், லாரன்ஸ் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி அடிக்கின்றார், என்ன ரொம்ப தூக்கலாகவே இறங்கி அடிக்கின்றார், தெலுங்கு பட ரீமேக் தான், அதற்கு என்று படம் முழுவதும் 10 பேரை அடித்துக்கொண்டேவா இருப்பது.
அதிலும் சண்டைக்காட்சிகளில் ஏதோ பேஸ்கட் பால் போல் வில்லன்களை தட்டி தட்டி விளையாடுவது எல்லாம் ஓவர் சார், சரி நிக்கி கல்ராணி படத்தில் எதற்கு? வேறு ஒன்றுமில்லை அவர் வந்தால், ஒரு பாட்டு உங்களுக்கு இலவசம், அவ்வளவு தான்.
லாரன்ஸ் எப்போதும் தான் கலந்துக்கொள்ளும் ரியாலிட்டி ஷோக்கள் போல் உள்ளது செண்டிமெண்ட் காட்சிகள், பிறகு சார் போதும் நீங்க மாஸ் தான் நாங்க ஒத்துக்கிறோம்ன்னு நாம் சொன்னால் கூட ‘நான் மாஸ், பக்கா லோக்கல்’ என கத்திக்கொண்டே இருக்கின்றார்.
ஒளிப்பதிவு செம்ம கலர்புல்லாக உள்ளது, தெலுங்கு படம் பார்த்தது போலவே ஒரு அனுபவம் கிடைக்கும், அம்ரிஷின் இசை அனைத்துமே தமன் ரகம்.
க்ளாப்ஸ்
லாரன்ஸின் துறுதுறு நடிப்பு, இரண்டாம் பாதியில் வில்லனிடம் செய்யும் சேட்டைகள்.
பல்ப்ஸ்
பார்த்து பார்த்து பழகி போன மசாலா கதை, கமர்ஷியல் படங்களில் லாஜிக் மீறல் இருக்கலாம், இதெல்லாம் அத்துமீறல் சார்.
சண்டைக்காட்சிகள் ஆக்ரோஷமாக இருந்தாலும், வில்லன்கள் பறப்பது சிரிப்பு தான் வருகின்றது.
மொத்தத்தில் மொட்ட சிவா ‘கெட்ட’ சிவா தான். கொஞ்சம் ரூட்ட மாத்துங்க சிவா....