நடிகர், நடிகை என்பதை தாண்டி இயக்குனருக்காக படங்களை எதிர்ப்பார்ப்பது ஒரு சிலருக்கே அமையும். அப்படி தன் படத்தின் மூலம் இந்தியாவையே எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கும் ஒரு இயக்குனர் மணிரத்னம்.
தன்னிடம் உதவி இயக்குனராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி முன்னணி நடிகராகி, தற்போது தன் குருவான மணிரத்னம் படத்திலேயே நடித்து இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் காற்று வெளியிடை, படம் வருவதற்குள் இது ரோஜா, உயிரே தழுவல் என பல கதை ஓட, மணிரத்னம் அதையே எடுத்து வைத்தாரா?, அதையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்தாரா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
கார்த்திக் ஏர் போர்ஸில் போர் பிரிவில் வேலை செய்கிறார், படத்தின் ஆரம்பத்திலேயே கார்கில் போரில் சண்டையிடும் போது விமானம் வெடித்து பாகிஸ்தான் ஆர்மியிடம் சிக்குகின்றார், அதை தொடர்ந்து ப்ளாஷ்பேக்காக தன் மலரும் நினைவுகளாக அதிதியுடன் காதலை நினைவு கூர்கின்றார்.
அதிதி மிலிட்ரி கேம்பில் மருத்துவராக இருக்க, ஒரு விபத்தில் கார்த்தி மருத்துவமனை கொண்டு வரப்படுகின்றார், அங்கு அதிதியை பார்த்தவுடன் காதல், பின் சொல்லாமலேயே சில காலம் காதல்.
பிறகு சொல்லி ஒரு சில நாட்கள் காதல் என இருக்க, கார்த்தியின் ஆணாதிக்க குணம், அதிதியை அவ்வபோது வெறுப்பேற்ற, கார்கில் போர் செல்லும் கார்த்தியிடம் ‘இனி நமக்கு செட் ஆகாது’ என சொல்லி அதிதி பிரிந்து செல்கின்றார்.
அதன் பிறகு ரியல் லைபில் பாகிஸ்தான் ஆர்மியிடம் இருந்து கார்த்தி எப்படி தப்பிக்கின்றார், அதிதி என்ன ஆனார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கார்த்தி கிளீன் ஷேவ் என நம் மனதில் ஒட்டவே ஒரு சில நிமிடம் எடுக்கின்றது, ஆனால், போக போக, பக்கா மணிரத்னம் ஹீரோவாக மாறுகின்றார், எப்போது சண்டை, ஒரு உயிரை கொல்வது என இருக்கும் கார்த்தியிடம் காதல் வருகையில் தன் ஆணாதிக்க குணத்தை காட்டும் இடத்திலும், பிறகு தான் செய்தது தவறு என கெஞ்சி காதலை சொல்லும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கின்றார்.
அதிதி எப்படி பார்த்தாலும் ஒரு அந்நிய முகமாகவே தான் தெரிகின்றார், படத்தில் என்ன தான் நன்றாக நடித்திருந்தாலும், நம்ம ஆடியன்ஸ் ரசனைக்கு ஏற்ற முகம் இல்லை, இருந்தாலும் அவரும் தனக்கான உரிமையை கார்த்தியிடம் கேட்கும் இடத்திலும், அதற்காக அவர் சண்டையிட்டு விலகும் தருணம், பிறகு மீண்டும் கார்த்தியை கைவிடமுடியாமல் அவரை துரத்தி வருவது என நன்றாகவே நடித்துள்ளார்.
உயிரைக்கொல்லும் ஒருவன், உயிரை காப்பாற்றும் ஒரு மருத்துவர் இவர்களுக்குள் காதல் வந்தால் எப்படியிருக்கும்? இதுவே இந்த படத்தின் ஒன்லைனாக மணிரத்னம் எழுதியிருக்க வேண்டும், இதில் கார்த்தியில் கதாபாத்திரம் கொஞ்சம் குழப்பத்துடனே தான் அவரே எழுதியிருப்பார் போல, திரையிலும் அது நன்றாகவே தெரிகின்றது. மேலும், முற்போக்கு கொள்கைகளை தன் படத்தில் தொடர்ந்து வைத்து வரும் மணிரத்னம் இந்த படத்தில் ஒரு படி மேலாக கர்ப்பமான பிறகு கல்யாணம், அதைவிட கிளைமேக்ஸில் ஒன்று செய்திருக்கின்றார், இதெல்லாம் ஓவர் அட்வான்ஸ் சார்.
எப்போதும் மணிரத்னம் படம் என்றாலே காதல் காட்சிகள் நிரம்பி வழியும், திரையரங்கில் நம்மை அறியாமல் நாமே சிரித்துக்கொண்டு இருப்போம், அதேபோல் தான் இப்படத்தின் முதல் பாதி, ஆனால், இரண்டாம் பாதியில் காதல் அதிகம் என்றாலும் பார்க்கும் பொறுமை தான் இல்லை. எப்போது பாகிஸ்தான் காட்சிகள் வரும் என நினைக்கத்தோன்றும் வகையில் உள்ளது.
படத்தின் டெக்னிக்கல் டீம், எழுந்து நின்று பாராட்டாலாம், ஏ,ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் தாண்டி பின்னணி இசை உலகத்தரம், அதைவிட இந்தியாவின் அழகை இதைவிட யாராலும் காட்டமுடியாது என்பது போல் ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஓர் ஓவியம் போல் இருக்கின்றது.
க்ளாப்ஸ்
படத்தின் டெக்னிக்கல் டீம், ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ரகுமானின் இசை.
படத்தின் முதல் பாதி, காதல் காட்சிகள்.
கிளைமேக்ஸ் கடைசி 20 நிமிடம்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை.
மொத்தத்தில் மணி சார் உங்க ஆடியன்ஸிற்கு ஓகே காற்று தென்றலாக உள்ளது, மற்ற ஆடியன்ஸையும் கொஞ்சம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். Rating:- 3/5