Friday, 7 April 2017

சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியது என்ன?



சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான சரத்குமாரின் சென்னை கொட்டிவாக்கம் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே போல தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை மயிலாப்பூர் வீடு, புதுக்கோட்டை வீடு, அவர் அலுவலகம் என மொத்தம் 30 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த வருமான வரித்துறை சோதனையில், விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் 2.2 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

மேலும், சேப்பாக்கம் எம்எல்ஏ-க்கள் விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்து 1.80 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார் வீட்டில் ஏதும் பறிமுதல் செய்ததாக இதுவரை தகவல் இல்லை. வருமான வரி சோதனை குறித்து தற்போது பேசியுள்ள சரத்குமார், நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன்.

ஆர்.கே நகரில் இன்று நான் மேற்கொள்ளவுள்ள பிரசாரத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை என நான் கருதுகிறேன்.

என் வீட்டிலிருந்து ஐடி துறையினர் எதுவும் எடுத்து செல்லவில்லை, அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என சரத்குமார் கிண்டலாக கூறியுள்ளார்.

சரத்குமார் நேற்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆர்.கே நகர் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next

Related